இயல் ஒன்று1 . அன்னை மொழியே
கற்பவை கற்றபின்
கேள்வி 1 :
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை”
இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.
விடை :
- நற்றிணை : நல் + திணை / நன்மை + திணை. 'நல்' என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் 'திணை' என்னும் பெயரும் சேர்ந்து 'நற்றிணை' என்னும் பெயர் பெற்றது.
- குறுந்தொகை : குறுமை + தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர்பெற்றது.
- ஐங்குறுநூறு : ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணை குறித்த குறுகிய நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்டதால் 'ஐங்குறுநூறு' எனப் பெயர் பெற்றது.
- பதிற்றுப்பத்து : சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய தொகுப்பு நூலாகும். ஒரு மன்னருக்குப் பத்துப் பாடல்கள் என்னும் முறையில் நூறு பாடல்களைக் கொண்டுள்ளதால் "பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது.
- பரிபாடல்: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், பல வகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் ஓசையையுடைய பரி பாட்டுகளின் தொகுப்பாக விளங்குவதால் இது 'பரிபாடல்' என்று அழைக்கப்படுகிறது.
- கலித்தொகை : ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளையும், கொண்ட கலிப்பாக்களால் அமைந்த நூலாதலால் கலித்தொகை எனப் பெயர் பெற்றுள்ளது.
- அகநானூறு: அகம் + நான்கு + நூறு - அகநானூறு. அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் 'அகநானூறு' எனப் பெயர் பெற்றது.
- புறநானூறு : புறம் + நான்கு + நூறு - புறநானூறு. இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் 'புறநானூறு' எனப் பெயர் பெற்றது.
கேள்வி 2 :
“எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்துநிமிட உரை நிகழ்த்துக. (முதல் தி.தேர்வு 2022)
விடை 1 :
வணக்கம்!
உலகில் உள்ள தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றால் மிகையாகாது. இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் மொழி.
தமிழ்மொழி தொன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, பெருமை, இயன்மை, வியன்மை எனப் பலவகை பெருமைகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர். முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி அவர்கள்,
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்" என்றார்.
அந்தளவிற்குத் தமிழ்மொழியின் பெருமையை உலகறியும். மேலும் தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை எளிதாக உச்சரிக்கலாம்.
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டு அறிஞர் டாக்டர் ஜி.யு.போப்., தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று பொறிக்கச் செய்தார்.
உலகின் மூத்த மொழி தமிழ்மொழி. மூத்தக்குடி வளர்த்த மொழியாம் தமிழ்மொழி மற்ற மொழிகளைக் காட்டிலும் இனிமையும், பெருமையும் பல்வேறு இலக்கிய தொன்மைகளையும் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் கொண்ட மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழ்மொழிக்கு ஈடு இணை இவ்வுலகில் எந்த மொழியும் இல்லையென பெருமையாக எடுத்துரைப்பேன். எந்தன் தமிழின் பெருமையை உலக அரங்கு முழுக்க எடுத்துரைப்பேன் அதுவே நான் செய்த பாக்கியம் என்று பலரும் கூறுகின்றனர். நன்றி! வணக்கம்!!
விடை 2 :
வணக்கம்! தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். தமிழின் பழமையையோ அல்லது அதன் பெருமையையோ வேறு எம்மொழியும் நெருங்கவியலாது.
தமிழ்மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டுள்ளது. “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” மாக்சு முல்லர் என்னும் மொழி நூலறிஞர் தமிழ்மொழியைச் சிறப்பித்துள்ளார்.
நிறைவாக, தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழர்களாகிய நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழின் சீரிளமையைக் காக்க என்றும் பாடுபடுவோம். நன்றி! வணக்கம்!!
பலவுள் தெரிக : புத்தக பக்கம் எண்: 19
கேள்வி 3:
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
விடை : இ) எம் + தமிழ் + நா
குறுவினா
கேள்வி 2 :
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
- சீவக சிந்தாமணி,
- வளையாபதி,
- குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
சிறுவினா
கேள்வி 1 : தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
விடை : புத்தக பக்கம் எண்: 20 | பிடிஏ-2 | மே-2022 |
- தமிழ்மொழி பழமைக்குப் பழமையாய் உள்ளது.
- கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து ஆட்சி செய்தது.
- பாண்டிய மன்னனின் மகளாக வளர்ந்தது.
- திருக்குறளின் பெருமைக்கு உரியதாய் விளங்குகிறது.
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாக அமைந்துள்ளது.
- நிலைத்து நிற்கும் சிலப்பதிகாரமாகவும், அழகான மணிமேகலையாகவும் விளங்குகிறது.
- அலைவீசக்கூடிய கடலையே ஆடையாக அணிந்திருக்கிறது இந்த நாடு.
- இந்த நாட்டை பெண்ணாக உருவகம் செய்கிறார்.
- அப்பெண்ணின் நெற்றியிலிட்ட திலகம் மணம் வீசுவதாக கூறுகிறார்.
- உலகிற்கு பாரத நாடு முகமாகத் திகழ்வதாகக் கூறுகிறார்.
- இந்திய நாட்டிற்கு, தென்னாடும் அதிலும் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்கிறார்.
- அந்தத் திலகத்தில் இருந்துவரும் வாசனைபோல அனைத்து உலகமும் இன்பம் பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்கது தமிழ்ப்பெண்னே என்று தெய்வத்திற்கு போற்றுகிறார்.
- இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயலை மறந்து வாழ்த்துகின்றோம் என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார்.
- பெருஞ்சித்திரனார் தமிழைப் பழமைக்குப் பழமையாய் தோன்றியவள் என்று பாடுகிறார்.
- கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாளும் பேரரசு என்கிறார்.
- பாண்டியனின் மகளாகவும் திருக்குறளின் பெருமைக்குரியவளாகவும் போற்றுகிறார்.
- எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்று இலக்கியங்களையும் காப்பியங்களையும் தன்னுள் கொண்டவள் என்று பாடுகிறார்.
- இறுதியாக, வியக்கத்தக்க அளவிலான நீண்ட காலம் நிலைத்து நின்று எல்லோரும் புகழும்படியாக இருக்கிறது தமிழ். அதைக் கேட்கும் போது மலரில் தேனைக் குடித்துவிட்டு சிறகசைத்துப்பாடும் வண்டினைப் போல் உன்னையும் சுவைக்கிறேன் என்கிறார்.
உலகம் வேரூன்றிய நாள் முதல் உயர்மொழி! - பெருஞ்சித்திரனார்
கூடுதல் வினாக்கள்