பக்கம் 34
மூதூர்- பண்புத்தொகை
(முதுமை+ஊர்–>முதுமை ஆகிய ஊர். இங்கு ‘மை’ என்னும் பண்பு உருபும் ‘ஆகிய’, ‘ஆன’ ஆகிய பண்பு உருபுகளும் மறைந்து வந்துள்ளதால் இது பண்புத்தொகை ஆயிற்று.)
உறுதுயர்- வினைத்தொகை
உற்ற துயர்
உறுகின்ற துயர்
உறும் துயர்
இங்கு, ‘உற்ற, உறுகின்ற, உறும்’ ஆகியவை பெயரெச்சங்கள். ‘உறுதுயர்’ என்ற சொல்லில் மூன்று காலங்களையும் காட்டக்கூடிய எச்சங்கள் மறைந்து வந்துள்ளன. இவ்வாறு ‘காலம் கரந்த பெயரெச்சம்’ வினைத்தொகை எனப்படுகிறது. கரந்த- மறைந்து வந்த…
கைதொழுது- மூன்றாம் வேற்றுமைத்தொகை.
கைதொழுது என்பது ‘கையால் தொழுது’ என விரிந்து வரும். கைதொழுது என்ற சொல்லில் மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஆல்’ மறைந்து வந்துள்ளது. எனவே இது மூன்றாம் வேற்றுமைத்தொகை ஆயிற்று.
தடக்கை- உரிச்சொற்றொடர்
(தட- நீண்ட )
நீண்ட கை என்பது இதன் பொருள்.
பெயர் மற்றும் வினைச்சொற்களின் பொருளை உயர்த்திக் கூறுவது உரிச்சொற்கள் ஆகும். இயல்பான கையை நீண்ட கை என உயர்வாகக் கூறியதால் இது உரிச்சொல் ஆயிற்று.
பக்கம் 55
நன்மொழி-பண்புத்தொகை
நன்மொழி- நன்மை+மொழி
நன்மை ஆகிய மொழி, நன்மையான மொழி- என விரிந்து வருகிறது. இதில் ‘மை’, ‘ஆன’, ‘ஆகிய’ என்னும் பண்பு உருபுகள் மறைந்து வந்துள்ளதால் இது பண்புத்தொகை ஆயிற்று.
வியத்தல்- தொழிற்பெயர்
வியப்பு என்னும் வினையைக் குறிக்கக்கூடிய பெயர் ஆதலின் இது தொழிற் பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி ‘தல்’ வந்துள்ளது.
நோக்கல்- தொழிற்பெயர்
நோக்கு+ அல்
‘நோக்கு’ என்ற வினையைக் குறிக்கக்கடிய தொழிலின் பெயர் ஆதலின் தொழிற் பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி ‘அல்’ வந்துள்ளது.
எழுதுதல்- எழுது என்ற வினையைக் குறிக்கக்கூடிய பெயர் ஆதலின் தொழிற்பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி ‘தல்’ வந்துள்ளது
உரைத்தல்- தொழிற்பெயர்
உரை என்ற வினையின் பெயர் ஆதலின் இது தொழிற் பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி ‘தல்’ வந்துள்ளது
செப்பல்- தொழிற்பெயர்
செப்பு (சொல்லு) என்ற வினையின் பெயரைக் குறிப்பதால் இது தொழிற் பெயர் ஆயிற்று.
செப்பு+ அல்
இங்கே தொழிற்பெயர் விகுதி ‘அல்’ வந்துள்ளது.
இருத்தல்- தொழிற்பெயர்
இரு என்ற வினையின் பெயரை குறிப்பதால் இது தொழிற் பெயர் ஆயிற்று.
இங்கே ‘தல்’ என்ற தொழிற்பெயர் விகுதி வந்துள்ளது.
வழங்கல்- வழங்கு என்ற வினையின் பெயரைக் குறிப்பதால் இது தொழிற் பெயராயிற்று.
வழங்கு+ அல்
இங்கே ‘அல்’ என்பது தொழிற்பெயர் விகுதி ஆகும்.
பக்கம் 57
அசைஇ- சொல்லிசை அளபெடை
அசைஇ- இளைப்பாறி
அசாவிடுதல்-இளைப்பாறுதல்
அசா- இளைப்பாறுதல்
அசா–>அ-ச்-❌ஐ–>அசை –>அசை+இ–>அசைஇ
ஐகாரத்தின் இனமான ‘இ’ அளபெடுத்து, இளைப்பாறுதல் என்ற பெயர்ச் சொல்லை (தொழிற்பெயரை) ‘இளைப்பாறி’ என்ற வினை எச்சச்சொல்லாக மாற்றுகிறது.
இவ்வாறு பெயர்ச் சொல்லின் மீது ‘இ’ என்னும் எழுத்து அளபெடுத்து வினையெச்சச் சொல்லாக மாற்றுவது சொல்லிசை அளபெடை ஆகும்.
கெழீஇ- சொல்லிசை அளபெடை
கெழு- துணை, உறவு, பழக்கம்
கெழு- பழக்கம்–> பெயர்ச்சொல் ( தொழிற்பெயர்)
கெழு+ஈ+இ–>பழகி
இவ்வாறு குறில் நெடிலாகி, நெடிலுக்கு இனமான குறில் அளபெடுத்து பெயர்ச்சொல்லை வினையெச்சச் சொல்லாக மாற்றுவது சொல்லிசை அளபெடை ஆகும்.
பரூஉக்குறை- இன்னிசை அளபெடை
பரு –> பரூ –> பரூ + உ –> பரூஉ
பரு-பருமன்(அளவு)
இங்கே எழுத்துக்கள் அளவு எடுக்கவில்லை எனில்
‘பருக்குறை ‘ என்று வந்திருக்கும்
‘பருக்குறை’ என்று சொல்லும்போது செய்யுளில் ஓசை குறையவில்லை.
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிரெழுத்துக்கள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
குரூஉக்கண்- இன்னிசை அளபெடை
குரு–> குரூ–>குரூஉ
குரு- நிறம் (சிவந்த நிறமுடைய)
குருக்கண் என்று சொல்லும்போது செய்யுளில் ஓசை குறையவில்லை. இனிய ஓசைக்காகவே குருக்கண்–> குரூஉக்கண் ஆனது. இவ்வாறு இனிய ஓசைக்காக உயிரெழுத்துக்கள் அளபெடுப்பதால் இது இன்னிசை அளபெடை ஆயிற்று.
பக்கம் 85
ஊழ் ஊழ்- அடுக்குத்தொடர்
சொற்கள் அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்.
வளர்வானம்- வினைத்தொகை
வளர்ந்த வானம்
வளர்கின்ற வானம்
வளரும் வானம்
காலம் கரந்த பெயரெச்சம் ஆதலின் வினைத்தொகை ஆயிற்று.
செந்தீ- பண்புத்தொகை
செம்மை+ தீ
செம்மை ஆன தீ
செம்மை ஆகிய தீ
“மை, ஆன, ஆகிய ” என்னும் பண்பு உருபுகள் மறைந்து வந்துள்ளதால் இது பண்புத்தொகை ஆயிற்று.
வாரா- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உரு அறிவாரா- உருவம் அறிய இயலாத
வாரா- இயலாத
‘வாராத’ என்று வந்திருக்க வேண்டும்.
ஆனால் ஈற்றெழுத்து ( கடைசி எழுத்து) கெட்டு அழிந்து போய், மீதமுள்ள எழுத்துகள் வந்துள்ளன.
வாராத- எதிர்மறைப் பொருளில் வந்துள்ளது.
இவ்வாறு, ஈறுகெட்டும் எதிர்மறை பொருளிலும் வந்துள்ளதால், இது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்.
பக்கம் 110
கேள்வியினான்- வினையாலணையும் பெயர்
கருத்தா- வினையைச் செய்பவர் (பெயர்)
கருத்தா செய்யும் வினையால் பெயரின் (கருத்தாவின்) முக்கியத்துவம் குறைவது (அணைவது) போல அமையும் சொல், வினையாலணையும் பெயர் ஆகும். வினையால் அணையும் பெயர்.
ஒரே சொல் வினையையும் வினைசெய்பவரையும் காட்டும்.
வினையால் அணையும் பெயரின் பகுதி வினைச்சொல்லாகவும் விகுதி பிரதிப்பெயராகவும் (அவன், அவள், அவர், அது, அன், ஆர் ) அமையும்.
கேள்வியின்+ ஆனான்
சான்றோர்தம் வாய்ச் சொற்களைக் கேட்டறியும் தன்மையினை உடையவன் ஆனான்
கேள்வி- கேட்டறி- வினைச்சொல்
ஆனான்- (கேட்டறிந்தவன்)- கருத்தா- பெயர்ச்சொல்
வினைச்சொல்லால் பெயர்ச்சொல் அணைகிறது. அதனால் இது வினையாலணையும் பெயராயிற்று.
காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
காடனுக்கும்- உம்
கபிலனுக்கும்- உம்
இங்கு ‘உம்’ என்னும் அசைச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வந்துள்ளது. எண்ணிக்கையில் வந்துள்ளதால் எண்ணும்மை ஆயிற்று.
பக்கம் 134
குண்டலமும் குழைகாதும்- எண்ணும்மை
குண்டலமும்-உம்
குழைகாதும்- உம்
எண்ணிக்கையில் ‘உம்’ என்னும் அசைச்சொல் வந்துள்ளதால் ‘எண்ணும்மை’ ஆயிற்று.
ஆடுக- வியங்கோள் வினைமுற்று
ஆடுக- வினைச் சொல்லின் பொருள் முழுமை பெற்றுள்ளதால் ‘வினைமுற்று’ ஆயிற்று.
வேண்டல், விதித்தல், வாழ்த்துதல், வைதல் என்னும் பொருள்பட வரும் தொடர் உணர்ச்சித் தொடர் ( வியப்புத் தொடர்) ஆகும்.
இங்கு ‘ஆடுக’ என்ற வினைமுற்று வியப்புப் பொருளில் வருவதால் இது வியங்கோள் வினைமுற்று ஆகும்.
பக்கம்-169
வண்ணமும் சுண்ணமும்- எண்ணும்மை
வண்ணமும்-உம்
சுண்ணமும்- உம்
எண்ணிக்கையில் ‘உம்’ வந்துள்ளதால் இது எண்ணும்மை ஆயிற்று.
பயில்தொழில்- வினைத்தொகை
பயின்ற தொழில்
பயில்கின்ற தொழில்
பயிலும் தொழில்
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை ஆகும்.
காக்கென்று- தொகுத்தல் விகாரம்
காக்கவென்று என்று வந்திருக்க வேண்டும்.
காக்க+ என்று–> காக்க+வ்+என்று—> காக்கவென்று (வ்- உடம்படு மெய்) —என்று இயல்பாக வந்திருக்க வேண்டும்.
ஆனால்,
காக்க+ என்று–> காக்க்+என்று (அகர ஈறு கெட்டு) –> காக்கென்று
இவ்வாறு இயல்பான வடிவமாய் இல்லாமல் குறைந்த எழுத்துகளால் (சொல்லினது பொருளைத் தொகுத்து) கூறுவது, தொகுத்தல் விகாரம் ஆகும்.
கணீர்- இடைக்குறை
‘கண்ணீர்’ என்று வந்திருக்க வேண்டும். சொல்லின் இடையில் ஓர் எழுத்து குறைந்து வந்துள்ளதால் இது ‘இடைக்குறை’ ஆயிற்று.
காய்மணி- வினைத்தொகை
காய்த்த மணி
காய்க்கின்ற மணி
காய்க்கும் மணி
உய்முறை- வினைத்தொகை
உய்த்த முறை
உய்க்கின்ற முறை
உய்க்கும் முறை
செய்முறை- வினைத்தொகை
செய்த முறை
செய்கின்ற முறை
செய்யும் முறை
மெய்முறை- வேற்றுமைத் தொகை
மெய்யின்(உடலின்) முறை- ‘இன்’ வேற்றுமை உருபு- வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாகும்.
கைமுறை- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
கையால் செய்யும் முறை-
‘ஆல்’- மூன்றாம் வேற்றுமை உருபு
செய்யும்- ‘கை’ என்ற கருவியின் பயன்
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் மறைந்து வந்துள்ளதால் இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.
.