காஞ்சிபுரம் :
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையம் தொடங்கவுள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கையும் துவங்கப்படவுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற 2023-2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிக்கையில் – தமிழ்நாட்டின் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி கலைப்பயிற்சிகள் வழங்கிட மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும் இப்பண்பாடு தொடர்ந்து வருங் காலங்களில் செழித்தோங்கவும் நாட்டுப்புற கலைகளில் பொதுமக்களிடையே ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் அழிந்து வரும் கலைகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்து அக்கலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தினை செயல்படுத்தும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நோக்கில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும் மாண்புமிகு நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையம் வருகின்ற 12.07.2024 முதல் தொடங்கப்படவுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான
1.தெருக்கூத்து,
2.கூத்து மத்தளம் (மிருதங்கம்),
3.புலியாட்டம்,
4.கைச்சிலம்பாட்டம்
ஆகிய நான்கு கலைப்பிரிவுகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தகுதி
இப்பயிற்சியில் 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேரலாம், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற இயலாதவர்கள் பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கட்டணம்
தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ.500/- மட்டும் செலுத்தப்பட வேண்டும்.
முகவரி
இப்பயிற்சியில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, (காதுகேளாதோர் பள்ளி அருகில்), சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631 502 எனும் முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரம் வேண்டுவோர் ஒருங்கிணைப்பாளர் 7010870088 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு சேரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
.