காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், நவீன சலவையகம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாட்டிலுள்ள பிவ, மிபிவ, சிபா மற்றும் சீம இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.