எம்பிபிஎஸ் படிப்பில் நடப்பாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு நெக்ஸ்ட் (NExT) தேர்வு 4வது ஆண்டில் நடத்தப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் படிப்பில் 2024-25ஆம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத் தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு, வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கான ஒருங்கிணைந்த நெக்ஸ்ட் தேர்வு ஆகியவை 4வது ஆண்டில் நடத்தப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் கல்விக்குழு, எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டம், பயிற்சித் திட்டம், தேர்வுமுறைகள் குறித்து ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது. மேலும், அதன் நகலை அனைத்து மாநில செயலாளர்கள், மருத்துவக்கல்லூரியின் முதல்வர்களுக்கும் அனுப்பியது.
அதில், “தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019, விதிமுறைகள் 10,24,25 மற்றும் 57 ஆகியவற்றின் கீழ் தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுகிறது. இந்த வழிமுறைகள் 2024-25 ஆம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு பொருந்தும். எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களுக்கு எந்த ஆண்டுகளில் எந்தப் பாடப்பிரிவினை கற்பிக்க வேண்டும். தகுதியான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் இந்த புதியப் பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும். மாணவர்களுக்கு கிளினிக் பயிற்சி கிடைக்கும் வகையிலும் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெக்ஸ்ட் நிலை 1 தேர்வு:
மாணவர்கள் குறைந்தது 75 சதவீதம் வருகைப் புரிந்திருக்க வேண்டும். செய்முறைத்தேர்விற்கு 80 சதவீதம் வருகைப்புரிய வேண்டும். எம்பிபிஎஸ் படிப்பின் ஐந்தரை ஆண்டுகளில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்த பின்னர் நெக்ஸ்ட் நிலை 1 தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும். பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்றிய பின்னர், நெக்ஸ்ட் நிலை 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். அதன் அடிப்படையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவராக பணிபுரியவும் முடியும்.
பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்தப்படும் முறைகள்:
முதலாம் ஆண்டு - உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
இரண்டாம் ஆண்டு - நோயியல், நுண்ணுயிரியல் மற்றும் மருந்தியல் பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.
மூன்றாம் ஆண்டு - சமூக மருத்துவம், தடயவியல் பாடங்களில் , மருத்துவம், நச்சுயியல், கண் மருத்துவம் மற்றும் காது, மூக்கு, தொண்டை வழியாக மருத்துவம் பார்த்தல் பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.
மதிப்பெண்கள்:
நெக்ஸ்ட் விதிமுறைகளின்படி, பகுதி 2 தேசிய அளவிலான தேர்வு நடத்தப்படும். அதில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்களில் நடத்தப்படும். ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கு 50 சதவீதம் மதிப்பெண்களைப் பெற வேண்டும். பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் குறைந்தப்பட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும். கருணை மதிப்பெண்கள் எதுவும் இருக்கக்கூடாது.
தமிழில் கற்கலாம்:
ஆங்கிலத்துடன் இணைந்து இரு மொழிக் கல்வியாக கற்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழ், இந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பயிலலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.