குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒன்றிய அரசு 2020 – ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின் படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இதன் படி, இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.5 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது குறு நிறுவனம். இவை முறையே ரூ. 10 கோடிக்கு மிகாமலும் ரூ.50 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது சிறு நிறுவனம். இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.50 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.250 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது நடுத்தரத் தொழில் நிறுவனம்.
இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார், ஆதாரோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் பான் கார்டு இருந்தால் தமது உற்பத்தி, வணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் udyamregistration.gov.in என்ற இணையதளத்தின் வழியே எளிதாக, தாமாகவே கட்டணம் ஏதுமின்றி உத்யம் பதிவுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உத்யம் பதிவுக்கான தளத்திலேயே அரசுத் துறை கொள்முதலில் பங்கு பெறுவதற்கான அரசு மின் சந்தை (GeM), பெரு நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தாம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உரிய காலக் கெடுவுக்குள் வழங்காமை குறித்த சிக்கல்களை அணுகுவதற்காக SAMADHAN தளம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விற்பனைத் தொகை குறித்த காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதான TReDS தளம் இவற்றிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறவும், அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன் பெறவும், உத்யம் பதிவுச் சான்றிதழ் அவசியமான ஒன்றாகும்.
உத்யம் பதிவு குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் மக்களைத் தேடி சேவைகள் என்ற அடிப்படையில் உத்யம் பதிவுக்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் வட்டார நிலைகளிலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் மட்டத்திலும் எதிர் வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் (தொலைபேசி : 044 – 27238837, 27236686, 27238551) அவர்களை நேரடியாக அணுகினால் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறும் நடைமுறை தெளிவாக விளக்கப்படும்.
ஆதார், ஆதாரோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் பான் கார்டு இவற்றுடன் நேரடியாக அணுகும் பட்சத்தில் உத்யம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து தரப்படும். இதுவரை, உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அரசின் பல்வேறு பயன்களை பெற உத்யம் பதிவுச் சான்றிதழைப் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.