தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிஎம் வித்யாலட்சுமி (PM Vidyalaxmi scheme) திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லி: தரமான உயர் கல்வியைப் பெறுவதில் மாணவர்களுக்கு பணப்பிரச்சனை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், ரூ.3 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
“பிஎம்-வித்யாலக்ஷ்மி திட்டத்தின் (PM-Vidyalaxmi Scheme) கீழ், நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையில்லாமல், உத்தரவாதமில்லாமல் கல்விக் கடன் பெற முடியும். முழு கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு சார்ந்த இதர செலவுகளும் இதில் அடங்கும்.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (என்ஐஆா்எஃப்-NIRF) பட்டியல் :
இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒருபகுதி ஆகும். அதன்படி, இந்த திட்டத்தில் திறமையான மாணவர்கள் இந்தியாவில் உள்ள பொது அல்லது தனியார் உயர் கல்வி நிறுவனங்களில், உயர் படிப்பைத் தொடர மத்திய அரசின் உத்தரவாதத்துடன் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பின் (என்ஐஆா்எஃப்-NIRF) தரவரிசைப் பட்டியலின்படி, நாட்டின் 860 தலைசிறந்த உயர் கல்வி நிலையங்களில் சோ்க்கை பெறும் மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற முடியும்.
ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்தின் கீழ், ரூ. 7.5 லட்சம் வரையிலான கடன்கள், நிலுவையில் உள்ள கடனைத் திருப்பிச் செலுத்தாத தொகையில் 75 சதவீத உத்தரவாதத்திற்குத் தகுதிபெறுவர்,” என்றார்.
PM வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் வட்டி மானியம்:
“பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் (மானியம்) அரசாங்கத்தால் ஏற்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்கள் மற்றும் பிற அரசு உதவித்தொகைகள் அல்லது வட்டி மானியத் திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறத் தகுதியில்லாத மாணவர்களும் இதில் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த வட்டி மானியம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
2024 -25 முதல் 2030 -31 வரையிலான வட்டி மானியத்திற்கான ரூ.3 ஆயிரத்து 600 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசாங்கம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மின் - வவுச்சர்கள் (E-voucher) மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (Central Bank Digital Currency - CBDC) வேலட்கள் மூலம் திருப்பிச் செலுத்தும்.
இத்திட்டம், உயர்கல்வித் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் PM-USP திட்டங்களான மத்திய துறை வட்டி மானியம் (CSIS) மற்றும் கல்விக் கடன்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் (CGFSEL) ஆகியவற்றிற்கு துணைபுரியும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பெருமிதம்:
இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறித்து பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உயர் கல்விக்கான அணுகலுக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர் சக்திக்கு அதிகாரமளித்து, தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
A big boost to making education more accessible.
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
The Cabinet has approved the PM-Vidyalaxmi scheme to support youngsters with quality education. It is a significant step towards empowering the Yuva Shakti and building a brighter future for our nation. https://t.co/8DpWWktAeG